Thursday, December 21, 2006

மகாலட்சுமிக்குத் தேவையானது என்ன?

மகாலட்சுமி அந்தக் குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரம். படிப்பு வாசனை அறியாத ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திலிருந்து கல்லூரியை எட்டிப் பார்த்திருப்பவர். படிப்பறிவில்லாத தாய் தந்தை. கடைகளில் எண்ணை வாங்கி விற்கும் ஏழை வியாபாரியின் மகளாக இருந்தும், கல்வி கண் போன்றது என்று உணர்ந்து படிக்க ஆசைப்பட்டு, உந்துதலோடு படித்துக் கொண்டிருப்பவர்.

எம்.எஸ்ஸி என்ற படிப்புக்குப் பொதுவாக நம் ஊரில் என்ன மாதிரியான வேலைகள் கிடைக்கும் என்பது எனக்குச் சரியாகத் தெரியாது என்றாலும், பி.எட் படித்து ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவுக்காக இப்போது பிச்சை புகினும் கற்கை நன்றே என்று பதிவுலகத்தினரின் வாசல் தேடி வந்திருப்பவர்.

ஒரு வருட படிப்பான பி.எட்டில் கிட்டத் தட்ட ஆறு மாதங்கள் ஏற்கனவே படித்துவிட்டார். இன்னும் அரைவருடம் முடித்தால், அவர் விரும்பிய வேலை கிடைப்பது உறுதி.

நிலா சொல்வது போல், இப்போதும் வேலை கிடைக்கலாம், ஆனால், அது அவர் விரும்பிய வேலையாக இருக்குமா என்று தெரியாது.

அத்துடன் அக்கம்பக்கம் கடன் வாங்கி, இதற்கு முன், கல்லூரிக்குக் கட்டிய ரூ30,000மும் வீணாகப் போகும். கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும், அதன் மூலம் இந்தக் கடனை அடைக்க அவரால் முடியாது போகலாம். செலவான முப்பதாயிரத்திற்குச் சேதி சொல்லிக் கொண்டிருப்பாரா? அல்லது தான் இன்னும் படிக்க வேண்டியதற்கு பணம் சேகரிப்பாரா?

கல்விக்குக் கட்ட வேண்டிய மிச்ச தொகைக்காக ஏற்கனவே நிர்வாகம் அவரை வகுப்புகளை விட்டு வெளியேற்றிவிட்டது. இப்போது எத்தனை சீக்கிரம் இந்தப் பணத்தைக் கட்டுகிறோமோ, அத்தனை சீக்கிரம் மகாலட்சுமி மீண்டும் படிப்பைத் தொடர முடியும்.

"பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்ற அடைமொழி சரிதான். ஆனால், கல்வி வாசனையே அறியாத ஒரு குடும்பத்துப் பெண் மென்மேலும் படிக்க முயலும்போது ஊக்குவிக்க முடியாவிட்டாலும், பொருள் கொடுத்து உதவ முடியாவிட்டாலும், "ஏன் படிக்கிறாய்! வேலைக்குப் போக வேண்டியது தானே?" என்று கேள்வி எழுப்புவது நாகரிகமாகத் தெரியவில்லை.

கல்விக்கு உதவி கேட்டு வந்திருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அவர் தன் குடும்பக் கதை பூராவும், கனவுகள், ஆசைகள் எல்லாவற்றையும் நம்மிடம் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று புரியவில்லை.

பி.எட்டுக்குப் பொதுவாக இடம் கிடைப்பதே கஷ்டம் என்கிறார்கள். இடமும் கிடைத்து, படிப்பும் நன்றாக படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவிக்கு வெறும் பணம் காரணமாக படிக்க முடியாமல் போய்விட்டது என்றால் மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வாகத்தான் இருக்கிறது.

நிலாவின் பதிவின் நியாயங்கள் சில யோசிக்க வைத்தாலும்,
-> படிப்பு வாசனையற்ற குடும்பத்திலிருந்து வருபவர்
-> பாதி கட்டணம் ஏற்கனவே கடன்வாங்கிக் கட்டியவர்
-> பாதி வருடத்தை இந்தப் படிப்பில் ஏற்கனவே செலவழித்தவர்
என்பது போன்ற விவரங்களை எண்ணிப் பார்க்கும் போது, மற்ற விஷயங்கள் அடிபட்டுப் போவதாகவே நம்புகிறேன்.

பதிவர்களிடமிருந்து சேகரிக்கப்படும் பணம் முழுவதும் ஐயா ஞானவெட்டியான் அவர்கள் மூலமாக நேரே கல்லூரியில் கட்டப்படும் என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதனால், பணம் வேறு வகையில் பயன்பட்டுப் போகும் வாய்ப்பிருப்பதாக யாராவது பயம் கொள்ளாமல் இருக்க..

ஆக, மகாலட்சுமிக்குத் தேவையானது என்ன? அதை அவர் முடிவு செய்து விட்டார். நாம் முடிவெடுக்க வேண்டியது, உதவும் மனமும், வசதியும் நமக்கு இருக்கிறதா? என்பதைத் தான்.

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல்,

ஆலயம் பதினாயிரம் செய்தல்,
அன்ன யாவிலும் புண்ணியம் மிக்கது

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்தொடர்புள்ள இடுகைகள்:
1. செந்தழல் ரவி
2. நட்சத்திரம் வெட்டிப்பயல்
3. நிலா
4. யாழிசைச் செல்வன்
5. ஓசை செல்லா
6. ஆழியூரான்
7. தருமி

39 comments:

 1. பொன்ஸ் said...

  இது தேவையா! என் பேரையே மாத்திடுச்சு ப்ளாக்கர்!! நேரமே சரியில்லைப்பா!! :((((

 2. செந்தழல் ரவி said...

  என்னங்க - பெயர் மாறி வந்திருக்கு...பேசாம ப்ரொபைல்லயும் மாத்திருங்க...

  பதிவுக்கு மிகவும் நன்றி !!! இந்த பதிவில் அடிக்கடி கயமை செய்து பின்னூட்டம் போடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...

 3. செந்தழல் ரவி said...

  சென்னைப்பட்டினம் பதிவில் இந்த விஷயம்

 4. பங்காளி... said...

  பூர்ணாவான பொன்ஸ்க்கு வாழ்த்துக்கள்.....உங்களுடைய கருத்தினை வழிமொழிகிறேன்....

  அப்பால நம்ம பதிவு ஒன்ன மெகாதொடர்ல சேர்த்திருக்கீங்க...ரொம்ப டேங்ஸ் தாயீ!

 5. ramachandranusha said...

  பொன்ஸ், நிலாவின் பதிவையும் படித்தேன். ஆனால் நீங்கள் எழுதியிருப்பதே என் எண்ணமும். பாதிவில் விட்ட படிப்பைத்
  தொடருவதே சரியான முடிவு. அதற்கு ஊர் கூடி தேர் இழுக்கலாம் வாங்க :-)

 6. ராம் said...

  for(i=0;i<100;i++){
  இந்த பதிவில் அடிக்கடி கயமை செய்து பின்னூட்டம் போடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்;
  }

 7. செந்தழல் ரவி said...

  ராம் - நன்றி !!!

 8. ராம் said...

  for(i=0;i<200;i++){
  இந்த பதிவில் அடிக்கடி கயமை செய்து பின்னூட்டம் போடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்;
  }

 9. மலைநாடான் said...

  //இது தேவையா! என் பேரையே மாத்திடுச்சு ப்ளாக்கர்!! நேரமே சரியில்லைப்பா!!//

  ரொம்ப நன்றி! சில தினங்களின் பின் வாய்விட்டுச் சிரிக்க வைத்தமைக்கு. கொஞ்சம் பொறுங்க இன்னொருவாட்டி:)))))

 10. Dharumi said...

  நடுவில் ஒரு குழப்பம் வந்தது உண்மைதான். தெளிவான உங்கள் பதிவு நன்றாகவே தெளிவித்தது. நன்றியும் பாராட்டுக்களும்...

 11. சபாபதி சரவணன் said...

  பொன்ஸ்,

  படிக்கும் காலத்தில் பக்கத்து நண்பன் கேள்விகளுக்கு விடை தெரியாமல் பேந்த பேந்த முழிப்பான். அய்யோ பாவம் என்று அவனுக்கு நம்மை பார்த்து காப்பி அடித்துக் கொள்ளச் சொல்லி உதவுவோம். முடிவில் நம்மை விட அதிக மதிப்பெண் வாங்கி வெறுப்பேற்றுவான்.

  Blogger Beta புண்ணியத்தில் நான் கடந்த ஒரு மாத காலமாக திணறி, கடைசியில் உங்களிடம் உதவிக் கேட்டவுடன் மின்னலென களமிறங்கி என் துயர் துடைத்தீர்கள். என் பதிவிற்கு விளம்பரமும் கொடுத்தீர்கள். இன்றிலிருந்து நான் நிம்மதியாக பதிவிட ஆரம்பித்திருக்கிறேன்.

  ஆனால் இந்த Beta வினால், உங்கள் பெயரே மாறிப்போய்விட்டது. அடடா!!

  வெந்தப் புண்ணில் மிளகாய்ப்பொடி தூவுகிறேனோ? :-)

 12. வெற்றி said...

  அடடா!
  பொன்ஸ்,இது உங்களின் வலைப்பதிவா?
  பூர்ணா எனும் பெயரில் யாரோ புதிய முகம் வந்திருக்குதாக்கும் என நினைத்து வாழ்த்துச் சொல்ல வந்தனான்.
  சரி, சரி... வந்தாச்சு ஒண்டும் சொல்லாமல் போகக்கூடாது.
  Keep up the good work.

  பி.கு:- பொன்ஸ், உங்களிடம் தனிமடலில் ஒரு உதவி கேட்டிருந்தேனே?

 13. வெற்றி said...

  பொன்ஸ்,
  நீங்கள், வெட்டி, செந்தழல் மற்றும் ஞானவெட்டியான் ஐயா ஆகியோர் துவங்கியிருக்கும் இம் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் ஞானவெட்டியான் ஐயா அவர்களுக்கு இது பற்றி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். உங்களின் பணி மிகவும் மகத்தானது. இப் பணியில் எனக்கும் ஒரு வாய்ப்புப் தந்தமைக்கு மிக்க நன்றிகள். சாதி ஒழிய வேண்டும் என்று மார்புதட்டிப் பதிவு போடுபவர்கள் எல்லாரும் செய்ய வேண்டிய பணி இதுதான். சமூகத்தில் அடக்கப்பட்டு, போதிய வசதிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு கல்வி வசதி ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான். பின்னர் சாதி, கீதி எல்லாம் தானாக ஒழிந்து விடும்.

 14. nila said...

  //எம்.எஸ்ஸி என்ற படிப்புக்குப் பொதுவாக நம் ஊரில் என்ன மாதிரியான
  வேலைகள் கிடைக்கும் என்பது எனக்குச் சரியாகத் தெரியாது என்றாலும், பி.எட்
  படித்து ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவுக்காக இப்போது பிச்சை புகினும்
  கற்கை நன்றே என்று பதிவுலகத்தினரின் வாசல் தேடி வந்திருப்பவர். //

  பொன்ஸ் அவர்களே,

  எம்.எஸ்.ஸி படித்துவிட்டு ஸ்மார்ட்டாக 22000 சம்பளத்தில் வேலை
  வாங்கியவர்களும் இருக்கிறார்கள். பி.எட் படித்துவிட்டு 40 வயதில் வேலை
  கிடைக்காமலும் இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்திலேயே என்னால் இதற்கு
  உதாரணம் தர முடியும். பி.எட் படித்துவிட்டு கஷ்டப்படுபவர்களே எனக்குத்
  தெரிந்து அதிகம். பலபேர் 800ரூபாய்க்கு மெட்ரிக் பள்ளியில் வேலை
  செய்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை

  //பி.எட் படித்து ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவுக்காக//

  இது கொஞ்சம் அதிகப்படியான கற்பனையாகவே எனக்குப் படுகிறது. நம்மூரில்
  எத்தனை பேர் நம் கனவுகளுக்காகப் படிக்கிறோம் என்று கொஞ்சம்
  சிந்தித்துப்பார்த்தால் பதில் கிடைக்கும்

  அப்படியே அது அவரது கனவாகவே இருப்பினும், படிக்கவே வேண்டாம் என்று யாருமே
  சொல்லவில்லையே. வேலை பார்த்துக்கொண்டே கரஸ்பாண்டன்ஸில் படிக்கலாமே!
  கரஸ்பாண்டன்ஸில் படித்தால் அவர் கனவு நிறைவேறாதா? எனக்குப் புரியவில்லை

  //இன்னும் அரைவருடம் முடித்தால், அவர் விரும்பிய வேலை கிடைப்பது உறுதி.//

  எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.
  எங்கள் ஊரில் சமீபத்தில் எம்.எஸ்.ஸி, பி.எட், எம்.ஃபில் முடித்த ஒரு பெண்
  2 லட்சம் பணம் கட்டி வேலைக்குச் சேர்ந்தாள்.

  //நிலா சொல்வது போல், இப்போதும் வேலை கிடைக்கலாம், ஆனால், அது அவர்
  விரும்பிய வேலையாக இருக்குமா என்று தெரியாது.//

  எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. அவர் விரும்பிய வேலை மைக்ரோ சாஃப்டில்
  என்றால் எல்லோரும் சேர்ந்து அவருக்காக பில் கேட்ஸிடம் பேசலாமே... அவர்
  விரும்பிய வேலைக்குத் தாராளமாகப் போகட்டும். ஆனால் அதற்காக அவர் உழைப்பது
  தவறா என்ன? மேற்கத்திய நாடுகளில் பிள்ளைகள் 15 வயதிலிருந்து
  ரெஸ்டாரன்டில் டேபிள் துடைப்பது முதற்கொண்ட அத்தனை வேலைகளையும்
  செய்கிறார்கள். அவர்களில் யாருமே அவர்களின் கனவு வேலைக்குப் போவதில்லையா?
  இப்படி patronize பண்ணித்தான் நாம் நமது இளைஞர்களைக் கெடுக்கிறோம்

  //அத்துடன் அக்கம்பக்கம் கடன் வாங்கி, இதற்கு முன், கல்லூரிக்குக் கட்டிய
  ரூ30,000மும் வீணாகப் போகும். கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும், அதன்
  மூலம் இந்தக் கடனை அடைக்க அவரால் முடியாது போகலாம். செலவான
  முப்பதாயிரத்திற்குச் சேதி சொல்லிக் கொண்டிருப்பாரா? அல்லது தான் இன்னும்
  படிக்க வேண்டியதற்கு பணம் சேகரிப்பாரா? //

  பி.எட் முடித்துவிட்டு வேலையே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வார்? கடனை
  எப்படி அடைப்பார்?

  //ஆனால், கல்வி வாசனையே அறியாத ஒரு குடும்பத்துப் பெண் மென்மேலும் படிக்க
  முயலும்போது ஊக்குவிக்க முடியாவிட்டாலும், பொருள் கொடுத்து உதவ
  முடியாவிட்டாலும், "ஏன் படிக்கிறாய்! வேலைக்குப் போக வேண்டியது தானே?"
  என்று கேள்வி எழுப்புவது நாகரிகமாகத் தெரியவில்லை.//

  'நாங்கள் வேலை வாங்கித்தருகிறோம். அந்தப் பணத்தில் கரஸ்பாண்டன்ஸில்
  நீங்கள் பி.எட் படியுங்கள். கடனையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுங்கள்.
  வேலை பிடித்தால் அதையே தொடருங்கள். இல்லை என்றால் பி.எட் முடித்ததும்
  உரிய வேலை தேடிக்கொண்டு மாறிவிடுங்கள்' என்று சொல்வது அநாகரீகமாக
  இருந்தால் நான் அநாகரீகவாதியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்

  //கல்விக்கு உதவி கேட்டு வந்திருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்
  தன் குடும்பக் கதை பூராவும், கனவுகள், ஆசைகள் எல்லாவற்றையும் நம்மிடம்
  விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று புரியவில்லை.//

  டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்துவிட்டு 'எனக்கு என்ன பிரச்சனை என்று
  சொல்லவேண்டிய அவசியமில்லை. நான் கேட்கிற மருந்தை விருப்பமிருந்தால்
  கொடுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டிருங்கள்' என்பது போலல்லவா
  இருக்கிறது? அப்படிக் கொடுக்கிற மருத்துவர்களை சிறந்த மருத்துவர்கள்
  என்று கொண்டாடிக் கொண்டிருந்தால் நாம் முன்னேறிய மாதிரிதான்!

  //ஆக, மகாலட்சுமிக்குத் தேவையானது என்ன? அதை அவர் முடிவு செய்து
  விட்டார். நாம் முடிவெடுக்க வேண்டியது, உதவும் மனமும், வசதியும் நமக்கு
  இருக்கிறதா? என்பதைத் தான்.//

  அவர் தனக்கு விஷம்தான் தேவை என்று முடிவெடுத்தால் ஓடிப்போய் உதவி
  செய்வோமா என்ன? அவர் கேட்பது அவருக்கு நலம்தருமா என்று பார்க்கமாட்டோமா?
  அப்படிப் பார்த்து உதவி செய்யுங்கள் என்று சொல்வது தவறாக எனக்குத்
  தெரியவில்லை!

  உதவி செய்வதும் செய்யாததும் அவரவர் முடிவு. வாதங்களையும் எதிர்வாதங்களையும் படித்துவிட்டு முடிவெடுப்பது நல்லதுதானே!

 15. பொன்ஸ் said...

  நிலா,

  //நிலாவின் பதிவின் நியாயங்கள் சில யோசிக்க வைத்தாலும்,
  -> படிப்பு வாசனையற்ற குடும்பத்திலிருந்து வருபவர்
  -> பாதி கட்டணம் ஏற்கனவே கடன்வாங்கிக் கட்டியவர்
  -> பாதி வருடத்தை இந்தப் படிப்பில் ஏற்கனவே செலவழித்தவர்
  என்பது போன்ற விவரங்களை எண்ணிப் பார்க்கும் போது, மற்ற விஷயங்கள் அடிபட்டுப் போவதாகவே நம்புகிறேன்//
  என் பதிவின் திரண்ட கருத்து என்று இவற்றைத் தான் முன்வைத்துள்ளேன்.

  இதைப் பற்றி உங்களிடம் கருத்து ஏதும் இல்லையா?

  இதைப் பற்றியும் நீங்கள், ஒவ்வொரு புள்ளியையும் மறுத்து ஏதேனும் சொன்னால், படிப்பவர்கள் குழம்பிப் போய் உதவி செய்துவிடாமல் இருக்க உதவும்.

  இன்றைக்குப் பாதியில் படிப்பிலிருந்த் துரத்தப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு உதவுமுன் இத்தனை கேள்விகளோடு வரும் நாம், நல்ல வேளையாக கௌசல்யா ஏன் மருத்துவம் படிக்க வேண்டும், டேபிள் துடைக்கப் போயிருக்கக் கூடாதா என்று விவாதிக்காமல் இருந்தோம்.!

 16. Anonymous said...

  //நல்ல வேளையாக கௌசல்யா ஏன் மருத்துவம் படிக்க வேண்டும், டேபிள் துடைக்கப் போயிருக்கக் கூடாதா என்று விவாதிக்காமல் இருந்தோம்.!//

  நல்லா சொன்னீங்க.

 17. சிந்தாநதி said...

  //எம்.எஸ்ஸி என்ற படிப்புக்குப் பொதுவாக நம் ஊரில் என்ன மாதிரியான வேலைகள் கிடைக்கும் என்பது எனக்குச் சரியாகத் தெரியாது என்றாலும்//

  எம்.எஸ்ஸி என்ற படிப்புக்கு இப்போதைக்கு கடைகளில் கண்கெழுதுவது தவிர வேறெதுவும் கிடைப்பதாக தெரியவில்லை.
  மேலும் இன்றைய தமிழ்நாட்டுச் சூழலில் ஆசிரியர் படிப்புக்கு இருக்கும் பாதுகாப்பும், வேலை உறுதியும் வேறெந்தப் படிப்புக்கும் இல்லை. ஐடி துறை மட்டுமே தனியார் துறையில் ஊதியம் உள்ள துறை. மற்ற பணிகளுக்கெல்லாம் கிடைக்கும் சம்பளம் கூலிவேலைகளுக்குக் கிடைப்பதை விடக் குறைவு.

  அதனால் தான் ஆசிரியர் படிப்புக்கு இத்தனை டிமாண்ட் இருப்பதும் கல்விக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதும். ஒருவர் வேலை வாங்குவதை விடக் கடினமானது பிஎட் படிப்புக்கு இடம் கிடைப்பது.

  என் பக்கத்து வீட்டில் ஒரு பையன். +2 முடித்து நுழைவுத்தேர்வில் நேரடியாக இடம் கிடைத்து இப்போது ஐடி பொறியில் படிக்கிறான். அவனது சகோதரி எம்எஸ்ஸி முடித்து பிஎட் சேர தமிழகம் முழுவதும் முயற்சித்து முடியாமல் ஒரு வருடம் வீணாக்க் கழித்தார். பின்னர் இந்த வருடம் பெருந்தொகை நன்கொடை கொடுத்து பி எட் சேர்ந்திருக்கிறார். இத்தனைக்கும் அந்தப் பெண் அந்தப் பையனை விட நன்றாகப் படிப்பவர். நல்ல மதிப்பெண்களும் இருக்கிறது.

 18. யாழிசைச்செல்வன் said...

  பதிவுக்கு நன்றி பொன்ஸ்!

 19. பொன்ஸ் said...

  பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...

 20. ஓகை said...

  பாரதி பாடல் இதற்கு பொருந்துமா என்று தெரியவில்லை.

  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலில் இது சேறுமா என்று மானசீகமாக பாரதியை அழைத்து கேட்டுப் பாருங்களேன். எனக்கு இல்லை என்று சொல்லிவிட்டார். உங்களுக்கு என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.

 21. பொன்ஸ் said...

  //ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலில் இது சேறுமா என்று மானசீகமாக பாரதியை அழைத்து கேட்டுப் பாருங்களேன். எனக்கு இல்லை என்று சொல்லிவிட்டார். உங்களுக்கு என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். //

  ஓகை,
  பொருந்துமெனத் தோன்றியதால் தான் இங்கே இட்டிருக்கிறேன். உங்களுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையெனில், அதனால் பாதகமில்லை.

  பொருந்திப்போகும் வேறு ஒரு ஏழைக்கு நீங்கள் உதவி செய்து கொண்டு தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

 22. லட்சுமி said...

  சாதரணமாகவே ஒரு பெண் கல்வி கற்றால் அடுத்த தலைமுறை முன்னேற்றத்திற்கு உதவுமென்பார்கள். இவர் ஆசிரியப்பணியை தேர்ந்தெடுத்து இருப்பதால் இன்னும் எவ்வளவோ பேருக்கு உதவமுடியும்..அவருக்கு உதவி செய்வதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

 23. Anonymous said...

  //for(i=0;i<100;i++)
  {
  இந்த பதிவில் அடிக்கடி கயமை செய்து பின்னூட்டம் போடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்;
  i =0;
  }//

  Update the code

 24. தம்பி said...

  என்னால் முடிந்த பின்னூட்ட கயமை.

  எனது உதவியை இன்று மாலை அனுப்புகிறேன்.

 25. Anonymous said...

  அன்புள்ள ஓகை,

  பாரதி வேறு என்ன சொன்னார் என்று ஞியாபகம் உள்ளதா ?

 26. Anonymous said...

  //சாதரணமாகவே ஒரு பெண் கல்வி கற்றால் அடுத்த தலைமுறை முன்னேற்றத்திற்கு உதவுமென்பார்கள். இவர் ஆசிரியப்பணியை தேர்ந்தெடுத்து இருப்பதால் இன்னும் எவ்வளவோ பேருக்கு உதவமுடியும்..அவருக்கு உதவி செய்வதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. ///

  well said laxmi.

 27. அழுகாச்சி ஆரோக்கியம் said...
  This comment has been removed by a blog administrator.
 28. முகமூடி said...

  மகாலட்சுமி விஷயமாக ஏகப்பட்ட பதிவுகள் வந்திருக்கின்றன. ஆனால் அதில் உங்களுடையதும் நிலாவுடையதும் தவிர மற்றவையெல்லாம் "இப்படியெல்லாம் எழுதி மனவருத்தம் தராதீர்கள், சமீபமாக நிலா பரபரப்புக்காக எழுதுகிறார், தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல்" என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு எழுதப்பட்ட ஓவர் ஆக்டிங் வெளக்கெண்ணெய் பதிவுகள். அதன் பின்புலதில் இருந்த 'கூட சேர்ந்து கும்மி அடிக்கலாம்' என்ற மனோபாவத்தையும் இதர பிற அரசியலையும் நம்மால் எளிதில் உணர முடியும். உருப்படியாக இருந்த உங்களுடையதும் ஓவர் ஆக்டிங் பாதையில் போவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. அது டூ மச் ஆகும் முன் என் இரண்டனா.

  முதலில் படிப்பவர் குழம்பி உதவி செய்யாமல் இருப்பார்கள் என்று ஆதங்கப்படுவதை எல்லாம் விடுங்கள். உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் கண்டிப்பாக செய்வார்கள். அப்படி யாராவது நிலாவின் கருத்தை படித்து அது படிப்பவருக்கு இன்னொரு பரிமாணத்தை காட்டி, அட இதுவும் சரிதான் என்று அவர் தீர்மானிப்பாரேயானால், அதையும் சரியான முறையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். "யோசிக்காதீங்க, கொடுத்திடுங்க" என்றெல்லாம் அவசரப்படுத்துவது சரியானதாக படவில்லை. அது ஏதோ திருட்டுத்தனம் போல் படுகிறது (இதையும் out of the contextல் எடுத்து ஏதாவது பிரகஸ்பதி உளரும்)

  இவ்வளவு நேரமாக கௌசல்யாவை பற்றி யாரும் பேசக்காணோமே என்று மாலையே யோசித்தேன். நீங்கள் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறீர்கள். பதிவிலோ அல்லது இதுவரையில் பின்னூட்டத்திலோ மகாலட்சுமியின் பிறப்பை பற்றி பேசாத நீங்கள், கௌசல்யாவை பற்றி பேசும்போது மட்டும் திடீரென மகாலட்சுமி தாழ்த்தப்பட்ட பெண் என்று பேச ஆரம்பித்தது ஏன் என்பதை பற்றி நீங்கள் யோசிக்கலாம். முதலில் இந்த தாழ்த்தப்பட்ட முற்படுத்தப்பட்ட என்ற முத்திரையெல்லாம் இல்லாமல் யோசிக்க முயற்சிப்போம். மகாலட்சுமி தாழ்த்தப்பட்டவராக இல்லாமல் இருந்தால் நீங்களோ இன்று வந்த மற்றவர்களோ யாரும் உதவிக்கு வந்திருக்க மாட்டார்களா? (இன்று ஓவராக ஆடும் ஒரு சிலர் வந்திருக்க மாட்டார்கள், அதை புள்ளிவிவரத்தோடு பேச முடியும். அது இப்போது தேவையில்லாதது) நீங்களே கேட்ட மாதிரி "கல்விக்கு உதவி கேட்டு வந்தவர் என்ற அளவில் மட்டும்" உங்களாலேயே பார்க்க முடியாதா?

  சரி, உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் சில விஷயங்கள் தெளிவாகும். கௌசல்யா பனிரெண்டாவது முடித்து கல்லூரியில் எட்டிப்பார்க்கிறார். அவருக்கு தமிழகத்தில் கிடைப்பதற்கரிய மெடிக்கல் படிப்பு அவரின் கல்வித்தகுதிக்கேற்ப இலவசமாக கிடைக்கிறது (இலவசம் என்பது இதே படிப்பை ப்ரைவேட் கல்லூரியில் காசு கொடுத்து படித்தால் ஆகும் செலவை கணக்கில் கொண்டு) மகாலட்சுமி ஏற்கனவே முதுகலை முடித்தவர். இப்போது ஊரெங்கும் லட்சக்கணக்கானவர்கள் படித்த/படிக்கும் பி.எட் படிப்பை தனியார் கல்லூரியில் வசதிக்கு மிகவும் மீறி படிக்கிறார். இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.

  ஏற்கனவே பாதி படிப்பை படித்துவிட்டார், மீதியை முடிக்க உதவலாம் என்ற வாதம் எவ்வளவு நியாயமோ அதே நியாயம் நிலாவின் கேள்விகளிலும் உள்ளது என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள். என் *** "எனக்கு எம்.பி.ஏ படிக்க ஆசையாக இருக்கிறது" என்ற போது நான் சொன்னது :: உன் தகுதியை வளர்த்துக்கொள். ஒன்று மிகவும் பிரஸ்டீஜியஸான கல்லூரிகளான ஐ.ஐ.எம் போன்றவற்றில் சேரு, எவ்வளவு கடன் வாங்கி என்றாலும் பார்த்துக்கொள்ளலாம்.. ஆனால் ஆசையாக இருக்கிறது என்று ஏ.பி.சி கல்லூரி, ஆ.ஆ.இ கல்லூரி போன்ற பேர் தெரியாத கல்லூரியில் சேர்ந்து நேரத்தை வேஸ்ட் செய்வதை காட்டிலும் வேலைக்கு சென்று அப்புறம் பார்ட் டைமில் எம்.பி.ஏ படி. அவன் ஆசையை நிராசையாக ஆக்குவதா என்ற குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இல்லை, ஆனால் இதுதான் ஒரு மிடில் க்ளாஸின் நிலைமை. நிதர்சனம். பணம் கொட்டிக்கிடந்து வெறும் பெருமைக்காகவும், கல்யாண அழைப்பிதழில் போடுவதற்காகவும் எம்.பி.ஏ படிப்பவர்களுக்கும் கடன் வாங்கி படிக்க ஆசைப்படுபவர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை சிந்திக்க வேண்டும். பேர் தெரியாத கல்லூரியில் படித்து வந்த சிலருக்கும் உடன் வேலை கிடைத்திருக்கும், ப்ரீமியம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்த சிலருக்கு வேலை கிடைக்காமலும் இருந்திருக்கும். ஆனால் பெர்சண்டேஜ். எம்.சி.ஏ போன்ற ஒரு சில படிப்புகளுக்கு மட்டுமே நேரடி கல்லூரி படிப்புக்கும் பார்ட் டைம்/அஞ்சல் வழி படிப்புக்கும் வேலை வாய்ப்பில் வித்தியாசம் இருக்கிறது. மற்றவற்றிற்கு அந்தளவு (படிப்புக்கு ஆகும் செலவை கணக்கில் கொண்டால்) இல்லை எனும்போது ஏன் அப்படி செய்யாமல் தனியார் கல்லூரி சாய்ஸை எடுத்தீர்கள் என்று ஒரு கேள்வி மனம் நோகாதபடி, ஒரு வெறும் கேள்வியாக கேட்பதில் தவறேதும் இருப்பதாக எனக்கு படவில்லை. அதை நியாயப்படுத்தும் அளவு அவரிடம் ஒரு தீர்க்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். சும்மா ஆசைக்கு என்றால் அது தவறு.

  எனக்கு கிடைத்ததில் மிகச்சிறிய அளவை அடுத்தவரிடம் பகிர்ந்துகொள்வதை வேறு யாருக்கும் தெரிவிப்பது என் வழக்கம் இல்லை. இருப்பினும் ஒரு வகையில் என்னுடைய சிறிய பங்கும் மகாலட்சுமிக்கு வந்து சேர்ந்துவிட்டிருக்கும் என்பதை என் தகுதியை கேள்வி கேட்க வரும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்காய் தெரிவித்துக்கொண்டு, இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். ஒரு விசயத்தை பலர் பார்க்கும் விதம் தனி. ஏற்கனவே சொன்னதுபோல் இவர் பாதி படிப்பை முடித்துவிட்டார் என்பதே இதற்கு ஆதரவளிக்க விரும்பும் பலருக்கு ஒரு ஊக்கியாக இருந்திருக்குமே தவிர இது ஆரம்பம் என்றிருந்தால் என்னையும் சேர்த்து பலர் பின்வாங்கியிருப்பார்கள். அது தவறும் அல்ல.. ஏனெனில் செருப்பில்லாத ஒருவருக்கு செருப்பு வாங்குவதற்காக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள். காலே இல்லாதவர்களை பற்றி பேசுபவர்களுக்கு தோள் கொடுப்பதின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகிறேன் நான். முதலில் பள்ளிப்படிப்பை முடிக்க முயற்சிப்பவர்களை தூக்கிவிட வேண்டும். அது இன்றியமையாதது. பிறகு கல்லூரி படிப்புக்கு. ஒரு உதாரணத்துக்கு http://indiahelpline.blogspot.com/2006/01/blog-post.html சென்று பாருங்கள். பிற்படுத்தப்பட்ட என்றெல்லாம் பேசுகிறீர்களே, சுத்தமாக புறக்கணிக்கப்பட்ட நரிக்குறவ இன சிறுவர் சிறுமிகளின் படிப்பை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்ற வருடம் எட்டாவது படித்துக்கொண்டிருந்த நரிக்குறவ சிறுமி படிப்பிலிருந்து நின்றுவிட்டாள். மேற்கொண்டு தகவல் இல்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் நிதி திரட்டுவது எனும்போது உலகம் பலவித்மாகத்தான் இருக்கும். நிலா ஒன்றும் இதெல்லாம் வெட்டி வேலை என்று ஒரே வார்த்தையில் சொல்லவில்லை. அவரின் நியாயமான சந்தேகத்தை கேட்டிருக்கிறார். அதற்கு நிதானமாக பதில் சொல்வதை விடுத்து 'அய்யோ உதவி செய்பவர்களையும் கெடுத்துவிடாதீர்கள்' என்றெல்லாம் சொல்வதும் அதை வழி மொழிந்து அனானிநாதர்கள் கும்மியடிப்பதும் கொஞ்சம் டூ மச்தான்.

 29. பொன்ஸ் said...

  முகமூடி,
  பதிவை விட நீளமான உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.. மகாலட்சுமிக்கான உங்களின் உதவிக்கும்..

  அனானி நாதர்களைப் பின்னூட்டக் கயமைத்தனத்தின் பகுதியாகவே அனுமதித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் சொல்வது போல் விஷயம் திசை திரும்பிவிட வாய்ப்பிருக்கிறது என்பது உண்மைதான் என்பதால், இத்துடன் அனானிகளுக்கு அனுமதி இல்லாமல் செய்துவிடுகிறேன்.

  இந்தியா ஹெல்ப்லைன் சுட்டிக்கும் மிக்க நன்றி..

  இதுவரை இது பற்றி எனக்குத் தெரியாமல் இருந்தது..

  மகாலட்சுமி குறித்த அறிவிப்பொன்றையும் இந்தியா ஹெல்ப்லைனில் இட்டு உதவ முடியுமா?

 30. பொன்ஸ் said...

  முக்கியமாகச் சொல்ல விட்டுப்போனது..

  //அவரின் நியாயமான சந்தேகத்தை கேட்டிருக்கிறார். அதற்கு நிதானமாக பதில் சொல்வதை விடுத்து 'அய்யோ உதவி செய்பவர்களையும் கெடுத்துவிடாதீர்கள்' என்றெல்லாம் சொல்வதும் //
  பதிலளிக்கும் விதமான பதிவாகவே இதனை இட்டேன். நிதானமான பதிவாக இருக்கிறதென்பதை உங்கள் பின்னூட்டமும் உறுதிப் படுத்துகிறது.

  ஆனால்,

  *********நிலாவின் பதிவின் நியாயங்கள் சில யோசிக்க வைத்தாலும்,
  -> படிப்பு வாசனையற்ற குடும்பத்திலிருந்து வருபவர்
  -> பாதி கட்டணம் ஏற்கனவே கடன்வாங்கிக் கட்டியவர்
  -> பாதி வருடத்தை இந்தப் படிப்பில் ஏற்கனவே செலவழித்தவர்
  என்பது போன்ற விவரங்களை எண்ணிப் பார்க்கும் போது, மற்ற விஷயங்கள் அடிபட்டுப் போவதாகவே நம்புகிறேன்.
  *****************
  என்ற என் விளக்கம் தனக்கு முத்தாய்ப்பாக இல்லை என்று நிலா சொல்லிவிட்ட படியால், பதில் சொல்ல என்னிடம் வேறெதுவும் இல்லாத காரணத்தால் (உங்களூக்கும் அதே பாதி வருடம் படித்து முடித்தவர் என்ற காரணம் தான் நியாயமாகத் தெரிந்திருக்கிறது..), மேல் விளக்கம் எதுவும் கொடுக்க முடியாமல் போய்விட்டது.

 31. ஓகை said...

  //பொருந்திப்போகும் வேறு ஒரு ஏழைக்கு நீங்கள் உதவி செய்து கொண்டு தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்//

  உண்மைதான்.

 32. ராம் said...

  for(i=0;i<300;i++)
  {
  இந்த பதிவில் அடிக்கடி கயமை செய்து பின்னூட்டம் போடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்;
  i =0;
  }


  Anony --> Ok

 33. மு. சுந்தரமூர்த்தி said...

  பொன்ஸ்,
  உங்கள் பதிவில் இதுவே முதல் பின்னூட்டம் (கடைசியாகவும் இருக்கும்). M.Sc. படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பதற்கான சில விளக்கங்கள் மட்டும்.

  1. தற்போது மகாலட்சுமி செய்வது போல பி.எட். படித்தால் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் வேலை கிடைக்கலாம். ஆசிரியர் வேலை கிடைப்பது எவ்வளவு எளிதெனத் தெரியவில்லை.

  2. பி.எட்.க்கு பதிலாக எம்.ஃபில். படித்தால் கல்லூரி விரிவுரையாளராக வேலை கிடைக்கலாம். அரசு கல்லூரிகளில் அல்லது தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த சம்பளத்தில் வேலைக்கு சேரவேண்டுமெனில் UGC நடத்தும் National Eligibility Test (NET) தேர்வு எழுதவேண்டும்.

  3. Junior Research Fellowship உடன் Ph.D. சேரவேண்டுமென்றால் UGC யும், CSIR ம் இணைந்து நடத்தும் JRF தேர்வு எழுதவேண்டும். Fellowship தொகை (ரூ 8,000 என்று நினைக்கிறேன்) தனியார் பள்ளியில் ஆசிரியருக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும். இரண்டாண்டுகளுக்குப் பிறகு Senior Research Fellowship (ரூ 10,000) கிடைக்கும். செலவில்லாமல் படிக்கவும், கல்வித்தகுதியை அதிகரிக்கவும் சிறந்த வழி இது. (ஆனால் இதில் வேறு தொல்லைகள் இருக்கும். சிலருக்கு படிப்பை முடிக்க ஆறேழு ஆண்டுகள் கூட ஆகும்).

  4. M.Sc. Applied Biology படித்திருப்பதால் ஏதேனும் தனியார் biotechnology கம்பெனியில் ஆரம்பநிலை வேலைவாய்ப்புகளும், அரசாங்க ஆய்வு நிறுவனங்களில் Research Associate போன்ற வேலைகளும் கிடைக்கலாம். ஆனால் இத்தகைய வேலைகள் அவ்விடங்களில் செல்வாக்கு உள்ளவர்கள் உதவியில்லாமல் கிடைப்பதில்லை. சிலர் படிப்பதற்கு சம்பந்தமில்லாமல் பகுதி நேரம் கணினிப் பயிற்சி எடுத்து ஏதாவது வேலைகளில் சேர்ந்துவிடுகிறார்கள்.

  இத்தகைய விவரங்கள் பொதுவாக கிராமப்புறத்தில் படிப்பறிவு இல்லாதவர்களின் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. அவருக்கு B.Ed. படிப்பது மட்டுமே தெரிந்திருக்கலாம். ஆனாலும் B.Ed. படிப்பிற்கு ஆண்டுக்கட்டணம் அறுபதாயிரம் என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. அரசு கல்வியியல் கல்லூரிகளில் சேர முயற்சித்திருக்கலாம்.

 34. சேதுக்கரசி said...

  //பொருந்திப்போகும் வேறு ஒரு ஏழைக்கு நீங்கள் உதவி செய்து கொண்டு தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்//

  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பொன்ஸ். ஓகை போலவே என் நிலைப்பாடும். என் ஊரில், தெந்தா இரண்டு குழந்தைகள் பள்ளிப்பருவத்திலேயே தாயை இழந்து பிறகு விபத்தில் தந்தையையும் இழந்ததால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்துகொண்டிருக்கிறேன். அவர்கள் இன்னும் பள்ளிப் படிப்பையே முடிக்கவில்லை. குடும்பத்தில் ஒரு பைசா வருமானமுமில்லை. ஞானவெட்டியான், செந்தழல் ரவி, வெட்டிப்பயல், பொன்ஸ்.. உங்கள் பதிவைப் பார்த்துவிட்டு, இந்தக் குழந்தைகளுக்காக நானும் செய்யலாமோ என்ற எண்ணம் வந்ததென்னவோ உண்மை தான். வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு. நல்லது நடந்தாலும் கமெண்ட் அடிக்க ஒரு கூட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும். அதைப் பொருட்படுத்தாதீர்கள்.

 35. SurveySan said...

  தேர் இழுக்க நானும் என் சக்திக்கேர்ப்ப உதவுகிறேன்.

  அப்படியே, இந்த குழந்தை பற்றி வந்த செய்தியையும் பார்த்து முடிந்ததை செய்யுங்கள்.

  குட்டிக் குழந்தை - உயிருக்கு போராட்டம்

 36. BadNewsIndia said...

  பொன்ஸ்,

  இது சம்பந்தமான நிலாவின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.

  [
  நல்ல கருத்துக்கள்.

  'உதவி வேண்டும்' என்று எவர் கேட்டாலும், பதிவுலகில் நல்ல நிலையில் இருக்கும் நம்மில் பலர் சற்றும் யோசிக்காமல் உதவி செய்து வருவது நல்ல விஷயமே.

  M.SC Applied Biology படித்த மஹாலட்சுமி, B.Ed படிக்க உதவி செய்ய வேண்டுமா என்பது நல்ல கேள்வி. கல்லூரியில் இருந்து துறத்தி விட்டால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை கொண்டவர், ஆசிரியை ஆக முடியுமா?

  M.Sc படித்தவருக்கு கிட்டாத வேலை B.Ed படித்தவுடன் கிடைக்குமா?

  60,000 ரூபாய் வீணாகக் கூடாது அல்லவா? ஞானவெட்டியான் போன்றவர்கள் அந்த பெண்ணுக்கு counselling செய்து தேவையான அளவு மட்டுமே பணம் (தவணை முறையில்) கொடுக்கவேண்டும்.

  M.Sc படித்த பெண் குடும்ப சூழலை உணர்ந்து ஒரு வேலை செய்து, B.Ed part-time ஆக படிக்கவேண்டும்.

  வேலை கிடைக்க யாராவது உதவுவதே அந்த பெண்ணின் இப்பொழுதைய பிரச்சனைக்கு தீர்வு.
  22 வயதான அந்த பெண்ணுக்கு அந்த புரிதல் இருக்குமா என்பது தெரியவில்லை. அதற்க்குத்தான், ஞானவெட்டியான், ரவி போன்றவர்கள் counselling செய்து உதவ வேண்டும்.

  பண உதவி செய்வோர் கண்டிப்பாக உதவியை ஞானவெட்டியான்/ரவிக்கு அனுப்புங்கள்.

  ரவி/ஞானவெட்டியான், வரும் பணத்தை கொண்டு பிரச்ச்னைக்கு ஓரளவுக்கு நிரந்தர தீர்வு வர வேண்டியதை செய்ய வேண்டும்.

  சில யோசனைகள்:

  1) மஹாலட்சுமிக்கு counselling - ( தற்கொலை மடத்தனம்/ இருப்பதை வைத்து பிழைப்பதே முக்கியம் - பிடித்தது எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது. )
  2) குடும்ப சூழலை உணர வைத்து, வேலை கிடைக்க வழி செய்யுங்கள்
  3) சிறிது பணம் வேலை கிடைக்கும் வரை தவணை முறையில் கிடைக்க வகை செய்யுங்கள்
  4) பகுதி நேர வழியில், B.Ed படிக்க யோசனை கூறுங்கள்
  5) என்ன/எப்படி இதற்கு தீர்வு காணப்பட்டது என்பதை ஒரு சீரான பதிவாக தந்தால், இன்னும் பல மஹாலட்சுமிகளுக்கு நம்மால் ஆன உதவியை செய்ய இது சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.
  ]

 37. Friends of Children - Pune said...

  Greetings and Newyear wishes from all the students of FoC. www.focpune.blogspot.com

  Friends of Children (FoC) is a group of individuals who have an urge to contribute their share to society.

  The main objective of FoC is to sponsor deserving students for higher education (above Class 10), guide them and assist them to earn their own living.

  We try to ensure that not only the best student is supported, but also a committed and talented student is encouraged as well.

  At present, FoC is sponsoring 85 students in Pune for academic year 2006-07. (60 Students in Pune and 25 students from the villages near Narayangaon). The approximate expense for these students is expected to be around 5.0 Lakh.

  Check the Photos of the Students

  FoC raises funds on a regular basis. We encourage our friends to form a group of 5 to 10 persons and donate as little as Rs 100 per month (100 x 12 x 5= Rs 6000 per year) which is sufficient for the yearly educational expenses for one student.

  FoC has raised and spent about 10 Lakhs in last 3 years educating about 200 Students in Pune.

  This mail is just for your info, If possible you can try the same with your friends in your city. You can really make change in the life of deserving students with just Rs 100 per month. This group is started and Run by Tamilians in Pune.

  Thanks
  Friends of Children Team
  Every Child has a DREAM and YOU have the POWER to filfill it.

 38. Friends of Children - Pune said...

  Friends of Children (FoC) is a group of individuals who have an urge to contribute their share to society.

  The main objective of FoC is to sponsor deserving students for higher education (above Class 10), guide them and assist them to earn their own living.

  We try to ensure that not only the best student is supported, but also a committed and talented student is encouraged as well.


  At present, FoC is sponsoring 85 students in Pune for academic year 2006-07. (60 Students in Pune and 25 students from the villages near Narayangaon). The approximate expense for these students is expected to be around 5.0 Lakh.

  FoC Students Picture

  FoC has raised & spent over Rs 10.0 lakhs for Educational purposes of over 200 Students in last 3 years.

  FoC raises funds on a regular basis. We encourage our friends to form a group of 5 to 10 persons and donate as little as Rs 100 per month (100 x 12 x 5= Rs 6000 per year) which is sufficient for the yearly educational expenses for one student.

  This mail is only for information, If possible anyone can do the same in their own city.
  Thanks
  FoC Team
  www.focpune.blogspot.com

 39. செந்தழல் ரவி said...

  என்னோட பதிவை பாருங்களேன்.. (tvpravi.blogspot.com)