Monday, December 18, 2006

விபச்சாரியைப் பெண்ணென்று அங்கீகரிப்பதும், சூசானும்

எவ்லின் காலன் (Evlyine Conlon)
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா

சூசான், புத்தகங்கள் என்ன சொல்கின்ற என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். சமீப காலம்வரை புத்தகங்களென்றால் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவள், இப்போது அவைகளைத் தொட்டதற்காக வருந்திக் கொண்டிருக்கிறேன். கிறிஸ்துமஸ் கேக்கிற்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு புலம்புகிற குடிகாரனைப்போல. வாசிப்பதில் பாதிப்பென்று ஏதுமில்லை அதாவது உடல்ரீதியாக. இப்பொழுதாவது ‘ஏதோவொரு இடத்திற்கு' எனக்கு வரமுடிந்திருக்கிறதே என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

'போன்னர் (Bonner) "கோல்' விழாமல் தடுத்தபோது நீ எங்கிருந்தாய் என யாரேனும் கேட்டால், கூச்சமோ வெட்கமோ இன்றி அதற்கான பதிலை என்னால் சொல்ல முடியும். அன்றைக்கு எனது சகோதரியின் பிள்ளைகளில் ஒருவனுக்கு உடல் நலமில்லா மலிருந்ததால், இங்கே டப்ளினில் (Dublin) அவள் வீட்டில்தானிருந்தேன். கட்டிலில் படுத்தபடி, ஒருவர் மாற்றி ஒருவர் தலைவரை போர்வையை இழுத்து போர்த்தியபடி தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். என்னுடைய முறை வந்தது. நானும் போர்வைக்குள் தலையை இழுத்துக் கொள்கிறேன்.

சட்டென்று அது நடந்து முடிந்துவிட்டது. நல்லவேளை அக்காட்சியை மறுஒளிபரப்புச் செய்தார்கள். அப்படித்தான் அன்றைக்கு அமெரிக்கர்கள் பாக்தாத் நகரில் குண்டுமழை பொழிந்தபோது, ‘பப்'பொன்றில் (Pub) இருந்தேன். சுற்றிலும் நிறைய அமெரிக்கர்கள். டப்ளினில் குறைந்தபட்சம் ஒரு அமெரிக்கனை யாவது பார்க்கமுடிகிற "பப்பும்' அதுவொன்றுதான். அயர்லாந்து நாட்டின் பாரம்பரிய இசையைக் கேட்பதற்காகவே அமெரிக்கப் பிரஜைகள் அங்கே கூடுகிறார்கள். வாசிப்பை நிறுத்திக் கொண்ட வாத்தியக் குழுவினருடைய பார்வை இப்போது தொலைகாட்சிப் பெட்டியின் மீது ஆணி அடித்ததுபோல பதிந்திருக்கிறது. எங்களைப் போலவே வாத்தியக் குழுவினர் நடந்து கொண்டதும், தொலைக்காட்சிப் பெட்டியில் அவர்கள் பார்வை பதிந்திருந்த விதமும் என்னவோ போலிருந்தது. குண்டுகள் விழுகிறபோது எழுந்த சீழ்க்கை ஒலியை, அதிநவீன சிந்தெட்டிசர் எழுப்பும் ஓசையுடன் இணைந்து கற்பனை செய்யக்கூட சங்கடமாக இருந்தது.

அமெரிக்கர்களைத் தவிர மற்றவர் முகங்கள் வெளுத்துப் போயிருந்தன. அதற்குப்பிறகு தொடர்ந்து வாசிக்க இசைக் குழுவினருக்கு ஆர்வமில்லை. சூசான், அந்த சமயத்தில் நீ எங்கிருந்தாய்? பொதுவாக நீ சீக்கிரம் உறங்கச் செல்பவளில்லையா? அப்படித்தான் போப்பாண்டவர் வந்த அன்றைக்கு நான் ‘கோர்க்' (cork)லிருந்தேன். உனக்கு ஞாபகமிருக்கிறதா? போப்பாண்டவர் நிகழ்ச்சி நிரலில் ‘கோர்க்' இல்லையென்பதை தெரிந்து வைத்திருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே போனார்கள். சூசான்... நீ எங்கிருந்தாய்? சொல்ல வேண்டாம். அவசியமில்லை. நீ எங்கே இருந்திருப்பாயயன்று எனக்குத் தெரியும். புத்தக வாசிப்பை நான் தொடங்கினதற்கு ஒரு காரணம் வேண்டுமெனில் ‘எங்குமில்லை' பிரதேசத்திலிருந்து நான் வந்ததற்காகவென்று சொல்லலாம்.

கென்னடியை சுட்டபோது நீ எங்கிருந்தாயென யாரேனும் உன்னைக் கேட்டால் உன்னிடத்தில் அதற்கான பதிலுண்டு என்பதை நான் அறிவேன். ஆனால் என்னைக் கேட்டால் வழக்கம்போல ‘எங்குமில்லை' என்றுதான் சொல்லவேண்டும். "

" வழியில் வாத்தியக்குழு - சரியாய்ச் சொல்ல வேண்டுமெனில் ‘துருத்திக்குழல் வாத்தியக்குழு' (The bagpipe band) மற்ற வாத்தியக் குழுவிடமிருந்து அவர்களைப் பிரித்துப் பார்க்கவோ அல்லது அக்குழுவினர் துருத்திக் குழல்களை பிரதான வாத்தியக் கருவிகளாகக் கொண்டிருந்ததாலோ, ஏதோவொரு காரணத்திற்காக அவ்வாறு பெயரிட்டு அழைத்ததாக ஞாபகம் - கிளாடிஸ் மயஹபி வீட்டில் (அதாவது அவள் கிராமத்திற்குத் திரும்பும்வரை குடியிருந்த வீட்டில்) ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிளாடிஸ்ஸுக்குத் தொழில் விபச்சாரம். விபச்சாரி. அதனாலென்ன? விபச்சாரிகள் எங்குதானில்லை? "எங்குமில்லை' மாதிரியான இடங்களிலுங்கூட இருக்கத்தான் செய்கிறார்கள்.

சட்டென்று எவருக்கும் பிடித்துபோகும் பெண்மணி, நேர்மையற்றவளென்கிற பேச்சிருந்தாலும் அன்பானவள். சிறுவர் சிறுமியர் புடைசூழ இருப்பவள். பையன்களும், பெண்களும் பார்ப்பதற்குக் கடைகாரர்கள், விவசாயிகள், கூலிகள், வாடகை ஊர்தி ஓட்டுனர்கள் போலிருந்தனர். கடைக்குப் போகும்போதெல்லாம், தவறாமல் குறிப்பாக இரவு நேரங்களில் அம்மா, "கால்வாய்ப் பக்கமாக நடக்கவேண்டாம், சாக்கடையில் விழுந்து தொலைப்பீர்கள்'' என்று எச்சரிப்பதுண்டு, அவளது எச்சரிக்கையை மீறுவதென்றால் எங்களுக்குக் கொண்டாட்டம். அதற்காகவே கால்வாய் பக்கமாய் நடந்து செல்வதுண்டு. வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் முதல்வேலையாக டார்ச் லைட்டை எரியவிடுவோம். கற்றையாக ஒளி வெளிப்பட்டதும் பரந்திருக்கும் வானத்தில், மேல்வானத்திலிருந்து அடிவானம் வரையிலும், தலைக்கு மேலேயும், பின்னர் கீழிறக்கி காலணிகள் மீதும் பாய்ச்சுவோம். பின்னர் பால்வெளியில் ஒளிக்கற்றையை ஆட்டம்போடச் செய்து அதனைக் கேலிசெய்தபடி கடந்து செல்வோம்.

எனக்கென்ன தோன்றுகிறதென்றால், ஒருவேளை டார்ச் ஒளியை, ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்த வாத்தியக் குழுவினரில் ஒருவன் கண்டிருக்கலாம், பிறகு வெளியில் வந்து எங்களிடத்தில் ஜான் எஃப் கென்னடி சுடப்பட்டதை அதாவது அவர் இறந்துபோனதை சொல்லியிருக்கலாம். அச்செய்தி நாள் முழுவதும் இயக்கத்திலிருந்த வயர்லெஸ் மூலம் அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் என்னை வியக்கவைக்கும் விஷயம், ஒத்திகையின் போது துருத்திக் குழல்கள் எழுப்பிய சத்தத்துக்கிடையே, கென்னடி கொலையுண்ட செய்தியை அவர்களால் எப்படி கேட்க முடிந்தது என்பது. இன்னொரு சாத்தியமும் இருக்கிறது.

காலதாமதமாக வந்த இசைக் கலைஞர்களில் ஒருவன் அச்செய்தியைக் கொண்டு வந்திருக்கலாம், அல்லது வெகு நேரத்திற்கு முன்பாகவே கென்னடி இறந்த செய்தியை அவர்கள் தெரிந்து வைத்திருந்து, எங்களைக் கண்டதும் அச்செய்தி இன்னமும் எங்களை எட்டவில்லை என்பதை யூகித்துக் கொண்டு சொல்லிவிடுவது நல்லதெனத் தீர்மானித்திருக்கலாம். நாங்கள் ‘எங்குமில்லை' பிரதேசத்திருந்து வந்தவர்கள் என்பதால் கென்னடி இறந்து பலமணி நேரங்கள் ஆகியிருக்க வேண்டும். தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அச்சம்பவத்திற்கு பிறகு, ‘எங்குமில்லை' பிரதேசத்திலிருந்து வந்திருந்து அநாமதேயப் பெண்ணென்ற வகையில் எனக்கேற்பட்ட வலிகளுக்கு நிவாரணம் தேடுவது அவசியமாயிற்று. வாசிக்கத் தொடங்கினேன். ஒரு நாளிரவு, கிளாடிஸ் ‘மாக்எம்' (திருவாளர் MacM) என்ற வாடிக்கையாளரோடு இருக்கையில் அவளுக்கு ஒருவித வலிப்பு வந்திருக்கிறது.

அச்செய்தி மடமடவென்று பரவ, அன்று முதல் அவள் வீட்டிற்கு வருவதை ஆண்கள் நிறுத்திக் கொண்டார்கள். ஆனாலும் அவள் தங்களைப் பற்றி எதையாவது உளறிக் கொட்டிவிடப் போகிறாள் என்றஞ்சியதால், வழக்கமாக கொடுத்துவந்த பணத்தை அவர்கள் நிறுத்தவில்லை. ‘கிளாடி'க்கும் இந்த ஏற்பாடு ஒருவகையில் மகிழ்ச்சியைத் தந்தது. கிடைத்த பணம் அவளை அண்டியிருந்த சிறுவர் சிறுமியர் வளர்ப்புக்குத் தேவையானதாக இருந்தது. சூசான், இரவு விடுதிகளில் புழங்கும் பெண்களை எடுத்துக்கொள், தெருவிளக்கு அளவில் விரலில் மோதிரத்தை அணிந்திருந்தும், அவர்கள் விரல்களில் நீலம் பாரிக்காததும், அவை இற்றுப்போகாததும் ஆச்சரியம். சூசான், என் செல்லமே! ‘எனக்குத் திருமணமென்று ஒன்று நடந்தால், எனது வாழ்க்கையின் பல ஏக்கங்களையும் பூர்த்தி செய்துகொள்வேன். ஆனால் அவற்றுள் எனது திருமணம் ஒன்றல்ல' என்று நான் கூறுவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லையென்று பலரும் நினைக்கின்றனர்.

அதில் உண்மையில்லை. சிறுமியாக இருந்தபோது இளம்பிள்ளை வாதத்திற்கு ஆசைப்பட்டதுண்டு. நமது உயிருக்கு அதனால் ஆபத்தில்லை என்பதும், ஊனம் நமது வசீகரத்தைக் கூட்டவல்லது என்பதையும் அறிந்து வைத்திருந்தேன். நான் ‘எங்குமில்லை' பிரதேசத்திலிருந்து வந்தவளென்பதை நினைவில் கொண்டால், இந்த ஊனம், அந்த ஊனமென்றல்ல, எதுவென்றாலும் சந்தோஷப்பட்டிருப்பேன். கடைசியில் புத்தகங்களைத் துறந்தவளாகவும், எதிலும் பிடிப்பற்றவளாகவும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வேனென்று பலரும் எதிர்பார்த்தார்கள். அப்படியேதும் நடந்து விடவில்லை. உனக்குத் தீப்பெட்டி வேண்டுமா? ம். பிடி. நீ மெழுகுவர்த்தியில் சிகரெட் பற்றவைக்கிற போதெல்லாம் எங்கோவொரு மாலுமி மரணிக்கிறான் தெரியுமா? நானும் என் பங்கிற்கு சரக்குகளோடு நிறைய கப்பல்களை மூழ்கடித்திருக்கிறேன்.

குளியலறையில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதை சமீபக் காலங்களில் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். அதுவொரு சுகமான அனுபவம். அதிகம் செலவுபிடிக்கிற உணவு விடுதிகளுக்கெல்லாம் சென்றதுண்டு, அங்கும் அவர்கள் மெழுகு வர்த்தியைத்தான் ஏற்றி வைக்கின்றனர். நான் ஏதோ பெரிதாக சாதித்து விட்டேனென்று சிலர் சத்தியம் செய்யக்கூடும். என்னைக் கேட்டால், ஊனமுற்றவளாக இருந்திருந்தால் கூடுதலாக சாதித்திருப்பேன். நான் வேறு பட்டவள் என்பது தெரிந்திருக்கும். ஆனால் புத்தகங்கள், சூசான் புத்தகங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தேன். கழுத்துவரை அமிழ்ந்து விட்டேன். சுவைத்தேன். கவளம் கவளமாக விழுங்கி வைத்தேன்.

ஒரு சிலர் உயிர்ச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில்லையா? அப்படி திக்குத் தெரியாத ஒரு தேசத்திலிருந்த என்னுடைய அனுபவங்கள் எப்படியிருந்திருக்குமென்று கற்பனை செய்துபார். நம்மைப்பற்றி புத்தகங்கள் கொண்டிருந்த அபிப்ராயங்கள் தவறானவை என்பதைப் புரிந்து கொண்டபோது காலம் கடந்திருந்தது. எனது வாழ்க்கையில் சோதனை மிகுந்த காலமென்று சொல்லவேண்டும். இன்றைக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் எனக்குக் காதற்கடிதங்களாகவே படுகின்றன. என்ன.. அவை அயோக்கியர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. புத்தகங்களை எழுதியவர்கள் நம்மை சுத்தமாக மறந்திருப்பது எரிச்சல் ஊட்டுகிறது. அதாவது அப்புத்தகங்களில் உண்மையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறியும்வரை அது தொடரக்கூடும். எதையாவது சொல்லித் தொலைத்திருக்கலாம். நம்மைபற்றி எதையுமே சொல்லாமலிருப்பதென்பது மோசம். புத்தகங்களில், பெண்கள் பிள்ளைபெறுவதை நான் வாசித்ததில்லை.

சூசான் சொல்லு! நீ வாசித்திருக்கிறாயா? நேற்றுவரை இருந்த குடும்ப எண்ணிக்கையில் ஒன்றை கூட்டவேண்டிய நேரம், மருத்துவமனைகளின் பிரசவித்திருந்த தங்கள் மனைவியரை பார்க்கவென்று வேகவேகமாய் மருத்துவமனைகளில் படிகளிலேறி மூச்சிறைக்க நடந்துவரும் கணவன்மார்கள். பெண்களருகே பச்சைக் குழந்தைகள் (சற்று முன்புவரை அப்படியேதுமில்லை) அல்லது இறந்துபோன மனிதனுக்கு நான்கு பிள்ளைகள் (ஏதோ அவைகளெல்லாம் வானத்திலிருந்து குதித்தை போல), என்றெல்லாம் எழுதுவார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் பிரசவங்கள் குறித்து பேசுவதில்லை. குமட்டலில்லை, வாந்தியில்லை, பிரசவ வேதனைகளில்லை, தங்கள் கணவன் மாரிடம் இரவு நேரங்களில் கொஞ்சம் முதுகுப்பக்கம் தாங்கிப் பிடியுங்களேன் என்கிற கெஞ்சுதலில்லை. கிழித்தலில்லை, கத்தரிப்பு அல்லது வெட்டுதலில்லை, அலறலில்லை, வீறிடுதலில்லை, இரத்தப் பீச்சுகளில்லை, விரிந்த கருப்பையில்லை. ஆக, பிறப்பைக் குறித்து அவர்களுக்கு எதுவுமே வேண்டாம், தெரிந்தென்ன ஆகப்போகிறது.

அதைத் தெரிந்துகொள்ளாதவரை யுத்தத்திற்கு ஆள் திரட்டுவது அவர்களுக்கு ரொம்பச் சுலபம். சூசான்! அங்கே அதோ முலைக்காம்பில் பாலுறிஞ்சுகிறதே அக்குழந்தை மிகபெரிய யுத்தவீரனென்று ஒருநாள் பேரெடுக்கக்கூடும். தாராளமாக எடுக்கட்டும். ஊர்பேர் தெரியாத பெண்ணொருத்தியின் சாராசரி ஆண் சினேகிதன் கூடத்தான் நினைத்தால் ஹீரோவாக முடியும். உதாரணத்திற்கு தீப்பிடித்த பக்கத்துவீட்டு சிறுவர் சிறுமியரை காப்பாற்றுதல் அல்லது லிபேயில் (Liffey)ல் குதித்து தற்கொலையிலிருந்து ஒருவனை மீட்பது மாதிரியான செயல்கள்- உண்மையில் இதிலேதும் ஹீரோத்தனம் இருப்பதாக நான் நினைப்பதில்லை. சொல்லப்போனால் இவைகளெல்லாம் அடுத்தவர் விவகாரங்களில் அனுமதியின்றி தலையிடுவது. ம்.. என்ன சொல்லவருகிறேன் என்பது உனக்குப் புரியுமென்று நினைக்கிறேன். ஹீரோவென்று பேரெடுக்க யாரையாவது கொல்லவேண்டுமென்பதில்லை.

நமக்கு ஆர்வமூட்டும் பல விஷயங்களில் சூதிருக்கிறது. சூசான், இன்னொரு விஷயம். நீ முதலில் ஓரிடமாக நின்று நான் சொல்வதைக் காதில் வாங்கு. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும், வேளைக்கு உறங்கச் செல்வதும் உனக்கு வழக்கமாகிவிட்டது. நான் யாருக்காகவும் அடங்கிப்போகின்றவள் அல்ல. எதற்காக அடங்கி போகவேண்டும்? அவர்கள் அடங்கிப் போகின்றவர்களா என்ன? ஓருபோதும் நடவாது. சூசான் உன்னால் நேற்று நடந்ததொன்று நினைவுக்கு வருகிறது, ஒரு பிள்ளை தனது தாயிடம், ‘அம்மா.. நான் நல்ல பிள்ளையாக நடந்துகொள்கிறேனா?' எனக்கேட்டது. அந்த பிள்ளை பரம சாதுவாகவே இருக்கட்டும், அப்படியிருப்பதால் பலனுண்டா? சொல்லேன். சில விஷயங்களை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் தப்பானவைகளும் அடக்கம். என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென ஒரு சில விநாடிகளில் தெரிவிக்கிறேன்.

நான் மாத்திரம் புத்தகமொன்று எழுதுவதென தீர்மானித்தால், பயப்பட வேண்டாம் நன்கு கேட்டுக்கொள், நானொன்றும் எழுதுவேனென்று தீர்மானமாகச் சொல்லவில்லை. எதற்காக முகத்தை இப்படி ‘உம்'மென்று வைத்திருக்கிறாய் சூசான். கொஞ்சம் சிரியேன். சிரிப்பதால் ஒன்றும் குடிமுழுகிப்போகாது. "
........

"நான் மாத்திரம் புத்தகமொன்று எழுத முடியுமெனில், நமது சார்பாக சொல்லவேண்டியதை ஒளிவுமறைவின்றி சொல்வேன். எனது பிள்ளைகளை ஈவு இரக்கமின்றி கொன்றது, எனது மகன்களை போர்முனைக்கு அனுப்பியது, விடுதியயான்றில் குவளையில் மூத்திரம் போனது (குறித்துக்கொள், மறுநாள் காலை விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு அக்குவளையால் நோய் ஏதும் வராமலிருக்க வெந்நீர்கொண்டு கழுவினேன்).

நாயொன்றுடன் புணர்ந்தது (குறித்துக்கொள், மனிதர்கள் அனைவரும் இப்படித்தானிருப்பார்களோ என்ற ஐயம் நாய்க்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக பிறகு அதனை பழையபடியே கீழே இறக்கி, விட்டுவிட்டேன்). சூசான், என்ன நான் சொல்வது உனக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? உலகெங்கும் கோவில்கள் மற்றும் தேவாலயச் சுவர்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் புணர்ச்சியைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்களென்பது உனக்குத் தெரியுமா? உண்மைதான். கற்களுக்கும் சொற்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. கற்களை குற்றம் சொல்வது எளிது. போருக்குச் சென்ற என் பிள்ளைகள், பிறர் பிள்ளைகளைக் கொன்றாலும் பரவாயில்லை, எந்த விக்கினமுமின்றி திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்வதுண்டு. கொல்லப்பட்ட பிள்ளைகள் சம்பந்தமாக நான் வாய் திறப்பதில்லை.

வாய் திறந்தால், பிற பெண்மணிகளும் என் வழியைப் பின்பற்றிவிடுவார்களென்கிற அச்சம். எனக்கு பிரச்சினையேதுமில்லை. இதுபோன்ற அபத்தமான கதைகள் என்வசம் இருக்கும்வரை நான் சொல்வதை ஒருவரும் நம்பப் போவதில்லை. குதிப்பேன், தாவுவேன், உயர்ந்த கட்டிடங்களுக்கு மேலாகப் பறந்து செல்வேன் என்றெல்லாம், நான் எழுதுகிறேனென்று வைத்துக்கொள், மாயையைத் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறேனென்று புகழ்வதற்கு ஒரு கூட்டமுண்டு, பதிலாக எனது உயிர்வாழ்க்கை இரண்டு விஷயங்களுக்கு ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறது. ஒன்று கற்பனாதிறன் மற்றது ஈரத்தன்மை கொண்ட யோனி எனப் புத்தகத்தைத் தொடங்கினாலோ (உனக்கு வேண்டுமானால் அது ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கலாம்) பலருக்கும் அது கற்பனையல்ல உண்மை.

எனது நிஜ வாழ்க்கையைத்தான் எழுத்தில் சொல்லியிருக்கிறேன் என்பார்கள். கட்டிடங்களிலிருந்து கீழே குதிப்பது, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பறந்து செல்வது எளிதான விஷயமல்ல. ஆச்சரியப்பட வைப்பது. ஆனால் மற்றது? சூசான். உண்மை. நான் மறுக்கவில்லை. உன் தரப்பில் நியாயமிருக்கிறது. நான் கவனத்துடன் எழுதவேண்டும். தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை மீள்பார்வை செய்யவென்று ஒரு சிலர் எழுதுகின்றனர். அல்லது பிறருக்கு இன்னல்களை இழைத்து, நாளும் தங்கள் இதயத்தில் சுமக்கும் சங்கடங்களின் பாரத்தை இறக்கி வைப்பதற்காக வென்று ஒரு சிலர் எழுதுகின்றனர். நான் எல்லாவற்றையும் இறக்கியாகணும், எல்லாவற்றையும் ஒரு முறையாவது பார்த்தாகணும். அப்படி பார்ப்பதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள முடியாதென்றாலும் பரவாயில்லை.

பிரச்சினைகளுக்கான தீர்வுகளையறிய நீ முயற்சிக்காதவரை, அவற்றைப் பார்ப்பதற்கு உணக்கு உரிமையுண்டு. பள்ளியில் படிக்கிற காலத்தில் சரித்திர பாடத்தை நீ விரும்பியது உண்டா? சூசான். உனக்கு பர்னெல் (parnell) பிடிக்குமா? எனக்கு பர்னெலையும் பிடிக்கும், கிட்டியையும் (kitty) பிடிக்கும். மைக்கேல் கோலின்ஸையும் (Michael Collins(2)) வாசிக்க விரும்பினேன். முப்பதாண்டுகள் போரை(3) எனக்கு அறவே பிடிக்காது. எது எப்படியோ அவை சொல்வதனைத்தும் உண்மையென்று நான் கொள்வதில்லை. ஆக சில பொய்களும் இருக்கின்றன. "சில பொய்களும் இருக்கின்றன' என்பதை ஏற்றுக் கொள்கிறபோது, அவைகள் உண்மையென்று சொல்வதுங்கூட பொய்களாக இருக்கலாமில்லையா? சரித்திரமெழுதும் எண்ணம் எதுவும் எனக்கில்லை, காரணம் இருக்கிறது.

நமக்குப் பிடித்தமான செய்தித் துணுக்குகளின் அடிப்படையில் என்ன எழுத முடியும். சாமர்த்தியமிருந்தால் வேறொன்றோடு முடிச்சுப் போடலாம். மற்றபடி அதிலிருந்து பெரிதாக தெரிந்துகொள்ள ஏதுமில்லை. அதற்கு சரித்திரம் என்ற பெயர்வைத்து நம் தலையில் கட்டியதைத்தவிர வேறென்ன நடந்தது. எங்கிருந்து இவர்களுக்குச் செய்திகள் கிடைக்கிறதோ? நான் செய்திகளை விரும்புவதில்லை. பெரும்பாலும் அவை நடந்து முடிந்த அல்லது நடக்கவிருக்கிற போர்கள் குறித்தே பேசுகின்றன. அச்செய்திகளின் பின்னணியில் நம்மை பயமுறுத்தும் எண்ணமிருக்கிறது. உலகில் செய்திகள் மாத்திரம் இல்லையெனில் ஆண்களில் சிலர் நன்னடத்தையுள்ளவர்களாக இருந்திருப்பார்கள். நமக்குத் தொடர்பில்லாத நாடுகளினுடைய செய்திகளில் நம்மை மூழ்கடிக்கிறார்கள்.

அப்படிச் செய்வதால் உள்ளூர் அபத்தங்களிலிருந்து மக்களைச் சுலபமாய் திசைத் திருப்ப முடிகிறது. சொல்லப்படும் செய்திகள் நமக்குச் சந்தோஷத்தை அளித்துவிடக் கூடாதென்கிற நல்லெண்ணத்துடன் கணிசமான நேரத்தை ஒதுக்கிச் செயல்படுகின்றனர். இரவில் நம்மை வேதனைப்படுத்துவது போதாதென்று, மறுநாளும் யார் எக்கேடுற்றாலும் அவர்களுக்கென்ன? மாலை நேரங்களில் செய்தித்தாள் அலுவலகங்களில் என்ன நடக்கிறது தெரியுமா, முதலில் ‘அம்மாக்கள்' வீட்டிற்குத் திரும்புகிறார்கள். அவர்கள் போன சிறிது நேரத்திற்கெல்லாம் ‘யுத்தங்களில்' ஆர்வமில்லாத ஒண்டிக்கட்டைப் பெண்களும் வீட்டிற்குத் திரும்புகிறார்கள்.

வீட்டில் தனிக்கட்டையாயிருக்கும் ஆண்களும், அப்பாக்களும் தங்கிவிடுகிறார்கள். இந்த அப்பாக்கள், ஏற்கனவே அதாவது திருமண பந்தத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும்வரை இரவு முழுக்க நின்று வேலை செய்ய பழகியிருந்தவர்கள். எனவே இரவு நேரங்களில் வேலைசெய்வதில் அவர்களுக்கு ஆட்சேபணைகளில்லை. சூசான், எந்த நேரமும் குண்டு போடக்கூடும் என்பதாகத்தானே இங்கு நிலைமையிருந்தது. பேயறைந்தது போல பெண்கள் இருக்கவும் அதுதானே காரணம். ஆனால் அப்படியேதும் நடக்காதென அறியவந்தவுடன், நீண்ட விடுமுறைக்குத் தயாரானோம், என்ன நடந்தது. மீண்டும் பழையபடி அதே நிலைமை. இரவு நேரங்களில் கண்விழித்து பணிபுரியும் ஆண்களுக்கு உலகில் ‘அமைதி' திரும்பி விடக்கூடாது. சூசான்! இந்த ஆண்களால் நமக்கேதும் பிரச்சினைகள் கூடாதென்றால், அவர்களை கட்டிலில்போட்டு கூரையைப் பார்த்தபடி படுக்கச் செய்யவேண்டும், அப்படியில்லையெனில் சமையற்கலையிலோ அல்லது டை அலங்காரத்திலோ இழுத்துப் போடவேண்டும். ஒருமுறை பத்திரிகையாளன் ஒருவனோடு இரவொன்றினை கழிக்க வேண்டியிருந்தது. இருவரும் ஒன்றாகப் படுத்தோம்.

அந்த மாதிரியான நேரத்திலும், அவன் தனது பணியையே நினைத்துக் கொண்டிருந்தான் என்பது என் அபிப்ராயம். கிட்டத்தட்ட மூன்று விநாடிகள் அவன் பரவசத்தில் இருந்திருக்கலாம். அதாவது நான் அந்த நிலையை அடைவதற்குச் சற்று முன்பாக கண்கள் வெறித்தபடி ஸ்தம்பித்தவன், ஒருவித பயத்துடன், வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டவன் போல அல்லது சூறைக்காற்றால் வாரிச் செல்லப்பட்டவன் போல, சட்டென்று விலகினான். புணர்ச்சியில் ஆர்வமிருந்தபோதிலும் அதன் அந்தரங்கத்தில் அக்கறை கொள்ளாதவன் என்பது புரிந்தது. அவர்கள் செய்திகளைச் சேகரிக்கிற இலட்சணமும் புரியவந்தது. புணர்ச்சிக்குப் பிறகும் தூக்கமென்பதில்லை, இரவு மூழுக்க கண் விழித்திருக்கிறார்கள்.

தங்களைச் சுற்றிலும் பகலாகவே இருக்கிறதென்கிற நினைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதை எனது சொந்த அனுபவம் உறுதிபடுத்தியது. சிறிது நேரம் கடந்திருக்கும், விடிகின்ற நேரம், உணர்ச்சியின் கொந்தளிப்பில் தவித்த நான், அதனைத் தணிக்குமாறு அவனிடம் வேண்டினேன். இயலாதென்றான். அவனுக்கு அதனினும் பார்க்க வேறு முக்கியப் பணிகளிருக்கிறதாம். "எவ்வாறெல்லாம் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள்' என்பது குறித்து எழுதவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன் என்றான். அதாவது புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள், மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், தெருவாசிகள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோரது வேதனைகளை எழுதவேண்டுமாம்.

நான் அவனிடம், ‘ஏழைகளென்ற வார்த்தையையே நான் கேட்டறியாததுபோல பேசுகிறாயே?' என்று கேட்டுப்பார்த்தேன். ‘தங்கள்படும் வேதனைகளை அவர்களே உன்னிடத்தில் சொல்லக்கூடிய வாய்ப்பு, உண்மையிலேயே இருக்கிறதா? நீ நம்புகிறாயா?' என்றும் கேட்டேன். நானென்றால் தவிர்ப்பேன். என்மீது அவனுக்குள்ள நல்ல அபிப்ராயத்தை குறைத்துக்கொள்ளும் விருப்பம் எனக்கில்லை. அடுத்தவரிடத்தில் உனது ஏழ்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலும் பார்க்க வேறு கேவலம் உலகில் இருக்கமுடியாது. ஆனாலும், என்போன்ற ‘எங்குமில்லை' பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்குங்கூட கென்னடி கொலையுண்ட செய்தியை கொண்டுபோய் சேர்ப்பதால், கண்விழித்து செய்தி சேகரிக்கிறவர்களைப் பாராட்டியே தீரவேண்டும். இதில் இன்னொரு சங்கடமும் இருக்கின்றது. இரவு விடுதிகளில் ஆட்டம் போட்டுக் கொண்டோ அல்லது உறங்கிக் கொண்டோ இருப்பவர்களுக்கு யார், யாரைக் கொன்றால்தான் என்ன? தெரிந்து என்ன ஆகப்போகிறது?

அதனால்தான், எனக்கு சரித்திரமேதும் எழுத விருப்பமில்லையென்று சொல்கிறேன். சரித்திரப் பாடங்களில், ‘பஞ்சம்' குறித்து எழுதுகிறார்கள். தாராளமாக எழுதட்டும். ஆனால் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு அதற்கான காரணங்களையும் புரிந்துகொண்டு இனி பஞ்சம்வராமல் தடுக்க முடியும் அல்லது பஞ்சமே ஏற்படாது, என்கிற உத்திரவாதத்தையும் இவர்கள் தரட்டும். ஸ்காட்லாந்தின் மேட்டுப்பகுதிகளை, காட்டுமிராண்டித்தனமாக சீரழித்தார்கள் என்ற கேள்வி, அதையுந்தானே விளக்கமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ‘பஞ்சத்தை' எழுத முடிந்தவர்களுக்கு, இதைச் சொல்ல ஏன் தைரியமில்லை, அதற்கான காரணத்தைத்தான் நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், சூசான். நான் புத்தகங்களை வாசிப்பதன் நோக்கமே, நான் அறிந்திராததை அறிவதற்கு, ஆனால் எனது அப்படியான தேவைகளைப் புத்தகங்கள் பூர்த்தி செய்வதில்லை என்பதுதான் உண்மை. சூசான் நாமும் சராசரி பெண் வர்க்கத்தைச் சார்ந்தவர்களா?

அப்படித்தான் நம்புகிறாயா? ஒருநாள் மாலை தொலைக்காட்சியில் ‘The Late Late’ என்ற நிகழ்ச்சியின்போது அழைத்த கணவனொருவன், ‘கூடியுள்ளவர்கள் சராசரி பெண்களல்லவென்றும், அவனது மனைவியை போல சராசரிப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க வேண்டுமென்றும்' சொன்னான். ஆனால் எனக்கென்னவோ அவனது மனைவியும் நம்மைப் போலத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு உண்மை தெரியவில்லை. சூசான், நாமும் சராசரி வகை பெண்களென்றுதான் நினைக்கிறேன். பாலியல் வன்முறையை அனுபவித்திராத சிறுமியர்கள். நல்லவேளை, நமது அப்பாக்கள் கொஞ்சம் முன்னதாகவே நம்மிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். பாட்டி வீட்டிற்குப் போவதற்கென்று வாடகைக்கு எடுத்திருந்த காருக்கு முன்னால் அப்பாவின் கால்களுக்கிடையில் நிற்பதில் ஒருவித சந்தோஷமிருந்தது என்பதும் உண்மை.

நீ பேருந்தில்தான் பயணம் செய்வாய், நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் நாங்கள் பாட்டி வீட்டிற்குப் போவதென்றால் கட்டாயம் வாடகைக்கு ஒரு கார் ஏற்பாடு செய்யவேண்டும். எனக்குப் பசி பற்றியும் எதுவும் தெரியாது. ஒருமுறை மதிய உணவிற்கென்று ‘போரிஜ்' (4) சாப்பிட வேண்டியிருந்தது. ஒரே ஒருமுறை காலை உணவிற்கென்றுகூட அந்த அபத்தத்தை விழுங்கித் தொலைத்ததில்லை. குமட்டிக் கொண்டு வந்தது. பெரும்பாலும் எங்கள் வீட்டு உணவில் உருளைக்கிழங்கும், முட்டைக்கோசும் கட்டாயமுண்டு. ஒருமுறை எனது அம்மாவிடம், ‘வெளியிலே போய் உணவருந்தலாமே', என்றேன். அம்மா ‘சம்மதம்' என்றாள். அம்மாக்கள் இப்படி சம்மதம் தெரிவிப்பதென்பது, சுலபத்தில் நடப்பதல்ல. தோட்டமெங்கும் பெரியவர்கள் அணிகிற மேலங்கிகள் பரவலாகக் கிடந்தன. பாத்திரங்கள் நிறைய பொரித்த கோசுடன், உருளைக்கிழங்கு. நான் முட்கரண்டிகளை எடுத்துவர சமையலறைக்குப் போய்விட்டு திரும்பவும் தோட்டத்திற்கு வந்து பார்க்கிறேன்.

மூன்று நிமிட இடைவெளியில் நாய் மிச்சம் வைக்காமல் துடைத்திருந்தது. அதற்குப் பிறகு நடந்ததை நினைத்தால் இப்போதும் எனது காதில் வலிக்கிறது. எனக்கு நடிக்கத் தெரிந்திருந்தது. அழுதுமிருந்தால் பிரச்சினையேதும் இருந்திருக்காது. பால்ய வயதில் ஒருநாள் தோட்டத்தில் சாப்பிட அமர்ந்தபொழுது நாய் எல்லாவற்றையும் தின்று தீர்த்துவிட்டது மாத்திரம் நினைவிலிருந்திருக்கும். மற்றொன்றும் நினைவிலிருக்கிறது. அது மாலை வேளைகளில் பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராய் வீட்டிற்கு வந்து சேரவேண்டுமென்று அம்மா விடுக்கும் எச்சரிக்கை. எதற்காக அப்படிச் சொல்கிறாள்? அடிக்கடி என்னுள் எழுந்த கேள்வி. எதற்காக நேரத்திற்கு வீட்டிற்கு வரவேண்டும். வீட்டில் அச்சமயம் ஏதேனும் விசேஷமா? அப்படி எதையாவது நினைவுகொள்ள முடிகிறவர்களுக்கு அம்மாக்களும் நல்லவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.

காரணமில்லாமல் நேரத்திற்கு வீட்டிற்குத் திரும்ப வேண்டுமென, நான் எனது பிள்ளைகளை வற்புறுத்தமாட்டேன். ஆனாலும், சராசரி பெண்களில் நானும் ஒருத்தி. கென்னடி கொல்லப்பட்ட இரவு நான் ‘எங்குமே இல்லை' என்பதையும், அன்றைய தினத்திலிருந்து நான் நடத்திவரும் வாழ்க்கையையும், நம்மிடம் சொல்லப்பட்டப் பொய்களையும் கணக்கில் கொள்வதெனில், நாட்டிலிருக்கும் சராசரி பெண்களில் நானுமொருத்தி. தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த ஒருவன் அல்லது ஒருத்தியை குறித்து சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லையென்கிறபோது அவர்கள் சாதாரணமானவர்களாகிறார்கள்.

ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது அழைத்த மனிதனுக்கான ‘சராசரிப் பெண்' என்பவள் எவள்? ஒரு சில புத்தகங்களை மட்டுமே வாசிக்கிற பெண்ணா? அல்லது ஒருசில புத்தகங்களை வைத்திருந்தும் அதில் ஒன்றினைக்கூட வாசித்து விடக்கூடாது என்பதில் உறுதியாயிருக்கிறாளே அவளா? அல்லது புத்தகங்களை வாசிக்கிற பெண்மணியாக இருந்து, தகாத வார்த்தைகளை என்னைப்போல தவிர்ப்பவளா? உதாரணமாக நான் ‘கரு, கர்ப்பம்' போன்ற சொற்களை இதுவரை உபயோகித்ததில்லை, அதனை பாவச்செயலாகவும், கொலைபாதகத்தைத் தூண்டுவதாகவும் நினைக்கிறேன். சூசான்! ஏற்கனவே உனக்குச் சொன்னதுதான், திரும்பவும் சொல்கிறேன், "கொலை பாதகத்தைத் தூண்டுவதாகவும் சராசரி பெண்ணாக இருக்க என்ன செய்யவேண்டும்? நமது அம்மாக்கள் சின்னப் பிள்ளைகளாக இருந்த காலத்தில், அவர்கள் சகோதரர்களுக்கு ‘Nappy’ மாற்றுகிற வேளையில், அங்கே இருக்கக் கூடாதென்று சொல்லப்பட்டது.

அவர்கள், இயேசு பெருமானின் அம்மாக்களாக நடத்தப்பட்டார்கள். இப்போதென்ன நிலைமை? விட்டால், எங்கே நம்மை குதறிவிடுமோ என நினைத்து, ஆண்குறியை விரல் முனைகளில் கையாளுகின்ற பெண்களை நம்மிடையே பார்க்கிறோம். சராசரி பெண்? சராசரி பெண்? அதற்கு என்ன விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள்? எப்படியிருந்தால் இவர்களுக்குச் சராசரி பெண்ணாம்? இரவொன்றில் பித்துப்பிடித்தவள் போல நகரத்தில் கண்ணிற் படுவதையெல்லாம் வாரி இறைக்காமலிருந்தால் போதுமா? எதனால் நமது குடிபானங்களை மாற்றித் தொலைக்கிறேன் என்பது இப்போது புரிகிறதா? இப்போது. ஷம்பெய்ன் கொண்டுவரச் சொல்லப்போகிறேன், பிறகு நான் வாசித்த புத்தகங்களில், நம்மைப்பற்றி சொல்லமறந்ததை உன்னிடத்தில் விளக்கிச் சொல்லவேண்டும்.

மேலும் வாசிக்க : இங்கு சுட்டுங்கள்


- எவ்லின் காலன் (Evelyn Conlon)

வயது 54, பிறந்தது வளர்ந்தது டப்ளின், அயர்லாந்து. தீவிர பெண்ணியவாதி. கல்வி, கருத்தடை, விவாகரத்து, ஆண்களுக்கு நிகரான ஊதியமென்று பல முனைகளிலும் பெண்களுக்காக போராடி வருபவர். ‘Rape Crisis Centre’ன் அடிப்படை உறுப்பினர்.


நன்றி அணங்கு , செப்டம்பர் - நவம்பர் 2006

0 comments: